மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் உரிமங்களையும் இரத்து செய்ய உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்த பின்னணியில், அவ்வாறான உண்மைகள் கண்டறியப்படும் நிலையில், மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்று, 5 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் புதிதாக 478 மதுபானசாலைகளை அமைப்பதற்கு புதிய நிபந்தனைகளின் கீழ் மதுபான உரிமங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மதுபானசாலைகளை திறப்பதற்கான அனுமதியை வழங்கும்போதும் உறவினர்களின் பெயரில் உரிமம் பெறுவதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற விசேட குழு கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இவ்வாறான சம்பவம் பதிவு செய்யப்படும் நிலையில் அல்லது முறைப்பாடு செய்யப்படும் நிலையில், திணைக்களம் உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மதுவரித் திணைக்கள கட்டளைச் சட்டத்தின் படி, திணைக்களத்தின் அனுமதி இன்றி மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்யவோ அல்லது வேறு தரப்பினருக்கு வழங்கவோ முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், எந்தவொரு தரப்பினரும் மதுபானசாலை உரிமத்தினை விற்பனைசெய்ய விரும்பினால், அவர்கள் 15 மில்லியன் ரூபாவினை அரசாங்கத்திற்கு செலுத்துவதன் மூலம் இதனைச் செயற்படுத்த முடியுமென மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin