இலங்கை மதுவரித் திணைக்களத்திற்கான வரி நிர்வாக முறைமையை அறிமுகப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை மதுவரித் திணைக்களம் வருமானம் ஈட்டுகின்ற திணைக்களமாக இருப்பினும், குறித்த வரி நிர்வாக பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு திணைக்களத்தில் தற்போது காணப்படுகின்ற பழைய முறைமைகள் வினைத்திறனற்றதாக இருத்தல், அதனால் வரி இழப்புகள் மற்றும் முறைகேடுகள் போன்ற பலவீனங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கின்றது.
பொதுமக்களுக்கும் ஏற்புடைய ஏனைய தரப்பினர்களுக்கும் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் சிரமமாக உள்ளது.
அத்துடன், ஏனைய நிறுவவனங்களிலுள்ள தகவல் தொழில்நுட்ப முறைகளுடன் ஒருங்கிணைந்து செயற்படும்போது சிக்கலான நிலைமைகள் தோன்றியுள்ளன.
அதற்கமைய, அனைத்து தரவுப் பரிமாற்றங்கள், இடர் முகாமைத்துவம் மற்றும் வரி ஒப்பீடுகள் போன்ற அடிப்படைப் பணிகளை நிறைவேற்றுவதற்காக மிகவும் வினைத்திறனாகவும், பயனுறு வாய்ந்ததுமான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முறைமையை நிறுவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.