இலங்கையில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் 6.3 மில்லியன் மக்களுக்கு போதுமான உயிர்காக்கும் உதவி மற்றும் வாழ்வாதார ஆதரவு வழங்கப்படாவிட்டால் அவர்களின் நிலைமை மோசமடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் ஆகியன தமது புதிய அறிக்கை ஒன்றில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.
உடனடி உணவு உதவி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள்
பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பில், இந்த இரண்டு அமைப்புக்களும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில்,
இரண்டு தொடர்ச்சியான பருவங்களில் மோசமான அறுவடைகள், உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவிகித வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மற்றும் அன்னியச் செலாவணிக் கட்டுப்பாடுகள் காரணமாக உணவு தானியங்களின் இறக்குமதி குறைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே உடனடி உணவு உதவி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் முக்கியமானவை என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
உதவி இல்லாமல், உணவுப் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் நெருக்கடி நிலை
குறிப்பாக 2022 அக்டோபர் முதல் 2023 பெப்ரவரி வரை முக்கிய உணவுகள், குறிப்பாக நெல், அரிசி உட்பட்டவற்றின் தற்போதைய நெருக்கடி தொடரும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே உணவுப் பாதுகாப்பு நிலைமைகள் மேலும் மோசமடைவதைத் தடுக்கவும், விவசாய உற்பத்தியை மீட்டெடுபதற்கும், சிறு விவசாயிகளை இலக்காகக் கொண்ட வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
சுமார் 30 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியுள்ள நிலையில், விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதே, இறுதியில் விவசாயத் துறையின் பின்னடைவை அதிகரிக்கும்.
வெளிநாட்டு நாணய கையிருப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் இறக்குமதி தேவைகளை குறைக்கும் மற்றும் பசியின் அதிகரிப்பைத் தடுக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் குறைவாகவே சாப்பிடுகின்றனர்.
2021 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இருந்து பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. மேலும் 2022 ஆகஸ்ட்டில் இது உச்சத்தை எட்டியது, இதன்படி ஆண்டு உணவுப் பணவீக்கம் கிட்டத்தட்ட 94 சதவீதமாக உள்ளது என்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் ஆகியன குறிப்பிட்டுள்ளன.