இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது இனப்படுகொலை நிகழ்ந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதலின்போது இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தல் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார்.
மே மாதம் 18 ஆம் திகதியை ‘இனப்படுகொலை நினைவு தினமாக’ அங்கீகரிக்க கனடா நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்ததாக ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கையின் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்காக நாங்கள் எப்போதும் வாதிடுவோம் என தெரிவித்திருந்தார்.
அத்துடன், மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டு முன்னாள் இலங்கை அரசாங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தோம் எனவும் ட்ரூடோ தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த கருத்துகளுக்கு இரண்டு நாட்கள் இடைவெளியின் பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சு பதிலளித்துள்ளது.
இதன்படி, உள்நாட்டுப் போரின் போது இலங்கையில் இனப்படுகொலை என்று அழைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டை நிராகரிப்பதாகக் கூறியுள்ளது.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை எனும் மூர்க்கமான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம், இதற்கு முந்தைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் திட்டவட்டமாக மறுத்து வந்துள்ளது.
இதற்கமைய, இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என கனடாவிலோ அல்லது உலகின் வேறு எந்த இடத்திலிருந்தும் தீர்மானிக்கவில்லை என இலங்கை விளக்கமளித்துள்ளது.
கனடாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கொள்கைகளுக்கு மாறாக, தனிநாடு கோரி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஆயுதமேந்திய மோதலின் முடிவுடன் தொடர்புடையது எனவும் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு கனடா உட்பட உலகளவில் 33 நாடுகளில் பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும் என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக தவறான விளக்கத்துக்கு பிரதமர் ட்ரூடோ ஒப்புதல் அளித்திருப்பது, வெளிநாடுகளில் வாழும் இலங்கை பாரம்பரியத்தின் மதிப்புமிக்க சமூகமான இலங்கை வம்சாவளி கனேடியர்களிடையே இன நல்லிணக்கத்தை மிகவும் சீர்குலைப்பதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் பரஸ்பர மரியாதையுடன் பொறுப்பேற்குமாறு கனேடிய அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.