இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலை நிச்சயமாக நடத்த வேண்டும்.
எனினும், பொதுத் தேர்தலை முதலில் நடத்தக் கோரி பொதுஜன பெரமுன தெரிவித்து வரும் நிலையில் இன்னும் அந்த நிலைப்பாட்டிலிருந்து பசில் உள்ளிட்ட குழுவினர் மாறவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த போதுமானளவு காலம் இருப்பதாக தேர்தல் தொடர்பான அவதானிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்துக்கு அமைச்சர்களை தேர்ந்தெடுக்க குறைந்தது இரு மாத காலங்கள் மாத்திரமே எடுக்கும்.
அதன் காரணமாக, ஜூன் மாதம் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதியாகும் போது தேர்தல் வாக்கெடுப்புகளை நடத்தி நிறைவு செய்ய முடியும் எனவும் தேர்தல் தொடர்பான அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த போதுமானளவு காலம் உள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலை அறிவித்து தேர்தல் வாக்கெடுப்பை நடத்த குறைந்தது 69 நாட்கள் எடுக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க முடியும்.
அதன்படி, செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி மற்றும் ஒக்ரோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி முடிக்க முடியும் என தேர்தல் தொடர்பான அவதானிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதி தேர்தல் குறித்த காலப்பகுதிக்குள் இடம்பெறும் என தேர்தலகள் ஆணைக்குழு அண்மையில் அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.
எவ்வாறாயினும், பொதுத் தேர்தல் முதலில் நடாத்தப்படாது என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறைமுகமாக பல கருத்துக்களை சமீபத்தில் ஏறிய மேடைகளில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.