இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்துவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொறுப்பான அண்டை நாடு என்ற வகையில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாரையும் இலங்கை அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம், எனினும் இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாரையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.
இந்த கொள்கைக்கு உட்பட்டு மிகவும் வெளிப்படையான முறையில், அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“இந்தியாவின் நியாயமான பாதுகாப்புக் கவலைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் எனவும் அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தினார்.
இதனிடையே, தற்போது இந்தியாவில் இடம்பெறும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட அவர், தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் இலங்கை இந்தியாவுடன் ஒத்துழைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, இந்திய மக்கள் படித்தவர்கள். தங்களுக்கு எது நல்லது என்பதை இந்திய மக்கள் அறிவார்கள். பொதுமக்களே தங்களுக்கானதை முடிவு செய்ய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.