இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தின நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரித்தானிய எதிர்க்கட்சியான, தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றின் Committee அறையில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றிருந்த இந்த நிகழ்வில் தொழிலாளர் கட்சியின் தலைவரும், பெண்கள் மற்றும் சமத்துவத்துக்கான நிழல் மாநிலச் செயலாளருமான Anneliese Dodds MP உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
பிரித்தானியாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாதிகப்பட்ட தமிழ் மக்களுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக கெய்ர் ஸ்டார்மர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளால் ஏற்பட்ட நீடித்த வலியையும் ஒப்புக்கொண்டார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாக மட்டுமன்றி நீதிக்கான அவசரத் தேவையை நினைவூட்டுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், இலங்கைப் போரின் போது நடந்த கொடுமைகளை மறக்கக் கூடாது என்றும் அவர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களுக்கு எதிராக போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதன் மூலம் நாம் இழந்தவர்களின் நினைவைப் போற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
கடந்த கால அநீதிகளை நிவர்த்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்காததை ஸ்டார்மர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை ஸ்டார்மர் மீண்டும் வலியுறுத்தினார்.
அத்துடன், இலங்கையில் தமிழ் மக்களுக்கான நிரந்தர சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஒரு விரிவான அரசியல் தீர்வு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.