உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரத்துசெய்வதற்கு அரசாங்கம் திட்டம்

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியற்றதா என்பதை ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி பிரதமருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்கள் தமது கடமைகளில் ஈடுபடுவதிலும் ஏனைய நடவடிக்கைகளின் போதும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதனை கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு சட்டமா அதிபர், தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு பிரதமருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கியதாக முந்தைய முறையிலே இந்தத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin