ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை கையாளும் அமெரிக்கர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசார நடவடிக்கைகளை கையாள்வதற்காக அமெரிக்க குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக கூறப்படுவதனை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளைக் கையாள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட அமைப்பாளர் லசந்த குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த விடயத்தில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனவும், ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வெளிநாடுகளின் தலையீடு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை கையாண்ட அமெரிக்க குழுவொன்று ரணிலின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை கையாள்வதற்காக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், குறித்த குழுவினர் சில அமைச்சர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் உட்பட ஆரம்பகட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பின்னணியிலே, ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடன் கலந்துரையாடிவரும் நிலையில், எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைப்பது தொடர்பில் உறுதியான தீர்மானங்கள் எட்டப்படவில்லை எனவும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் லசந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin