கைதுகளுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கண்டனம்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் பூர்த்தியடைகின்ற நிலையில், அதனை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஆங்காங்கே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனையும் அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு அவர்களின் உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் உரிமை உண்டு என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

போரில் இறந்தவர்களை நினைவு கூரும் உரிமையானது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமை எனவும், இலங்கையிலும் அந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin