கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்படுத்திய தாக்கத்தின் பலனை உலக நாடுகள் இன்றளவிலும் எதிர்கொண்டு வருகின்றன.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இதுவரை 704,753,890 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,010,681 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளினால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இதன்படி, கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட சுமார் 11,000 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், அஸ்ட்ராஜெனேகா (Astrazeneca) நிறுவனம் தமது கொரோனா தடுப்பூசியை உலகளவில் மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தது.
இதன்படி, அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி தொடர்ந்து தயாரிக்கப்பட அல்லது விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்ட எந்தவொரு நபரும் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என உற்பத்தி நிறுவனமே ஏற்றுக்கொண்டதாகவும், அதனை அவர்கள் முன்பே அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தடுப்பூசி எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை அல்ல எனவும், தடுப்பூசி செலுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட பக்கவிளைவுகள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தடுப்பூசி அவ்வளவு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது எனவும் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.