இலங்கைத்தீவின் அரசியல் அரங்கத்தில் ஏராளமான பூசி மெழுகும் கதைகள் அண்மைய தினங்களாகவே அதிகளவில் கேட்கப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சிகளுக்கு என்றுமே இல்லாத வகையிலான ஒரு கரிசனை நாட்டு மக்கள் மீது தற்போது எழுந்துள்ளன.
இந்நிலையில், ஹர்ஷ டி சில்வாவின் யோசனையில் ஆரம்பிக்கப்பட்ட ‘சுவசெரிய‘ அம்பியூலன்ஸ் சேவையில் 322 அம்பியூலன்ஸ் வண்டிகளில் 56 இயங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதில் பணியாற்றிய சாரதிகள் மற்றும் அவசர சேவை உத்தியோகத்தர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு இயங்காத அம்பியூலன்ஸ் வண்டிகளை புதுப்பித்தல், ஊழியர்களை பணியமர்த்துதல் போன்றவற்றில் அரசாங்கத்தின் கவனம் குறைவடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இதனை வீழ்ச்சியடைய அனுமதிக்காது இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி சோசலிசம் பேசி வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இன்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி பல தரப்பட்ட அரசியல் கொள்கைகளை முன்வைத்து வருகின்றது.
அதற்கு காரணம் அவர்களால் வெற்றி பெற முடியும் என சமூகத்தில் ஒரு கருத்தை உருவாக்கவே என ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டு மக்கள் இது தொடர்பில் தெளிவான ஒரு புரிதலுடன் உள்ளார்கள் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
மேலும், கட்சிகளுக்கு பின்னால் தற்போது இருக்கும் இந்த மக்கள் கூட்டத்தை வைத்து வாக்குகளை தீர்மானிக்க முடியாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.