“இந்தியா வழங்கிய விமானங்களை ஓட்ட எங்கள் இராணுவத்தில் யாரும் இல்லை”: மாலைத்தீவு

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் தங்கள் இராணுவத்தில் இல்லை என மாலைத்தீவு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

தலைநகர் மாலேயில் நேற்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சர் கசான் மௌமூன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த “விமானங்களை ஓட்டுவதற்கு உரிமம் பெற்றவர்கள் எவரும் இல்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியப் படையினர் மாலைத்தீவை விட்டு வெளியேறிய சில நாட்களில் அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது விமானத்தை ஓட்டுவதற்கு பயிற்சியை தொடங்கிய மாலைத்தீவு வீரர்கள் சில குறிப்பிட முடியாத காரணங்களால் பயிற்சியை முடிக்க முடியவில்லை என்று மௌமூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மற்றும் மாலைத்தீவு அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த பெப்ரவரி மாதம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்தியப் படையினர் கடந்த வாரம் மாலைத்தீவில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் சீன சார்ப்புடைய மொஹமட் முய்ஸு ஜனாதிபதியான பதவியேற்றார். முற்று முழுதாக இந்திய எதிர்ப்பு கொள்ளையை பரப்பியே அவர் ஆட்சிபீடம் ஏறினார்.

இந்நிலையில், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோர்னியர் விமானத்திற்கான இரண்டு தளங்களை இயக்குவதற்காக மாலைத்தீவில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியப் படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, முய்ஸுவின் அரசாங்கம் பொருளாதார உறவுகளை அதிகரிக்க சீனாவுடன் பல ஒப்பந்தங்களை செய்து கொண்டு பல திட்டங்களில் இந்தியாவை ஓரங்கட்டியுள்ளது.

மாலைத்தீவு கடந்த மார்ச் மாதம் சீனாவுடன் இராணுவ உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அத்துடன், அதன் துறைமுகத்தில் சீன ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்தவும் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin