மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை பெற்ற அமைச்சர்கள் சுமார் 10 பேர் மற்றும் அரச சேவையில் உயர்நிலை அதிகாரிகள் சுமார் 200 பேர் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரதான சிங்கள நாளிதழான ‘லங்காதீப‘ செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமைச்சர்களுள் அநேகமானோர் தமிழர்கள் எனவும் அச் செய்தியில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள ஏனைய அமைச்சர்களுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் மனு தாக்கல் செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக சில சிவில் அமைப்புகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) தெரிவித்திருந்தன.
இவர்களின் குடியுரிமை தொடர்பில் இதுவரையில் எவரும் கேள்வியெழுப்பவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
எவரேனும் அவ்வாறு கேள்வியெழுப்பினால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் உத்தரவு கிடைக்கும் வரையில் மாத்திரம் அவர்களுக்கு அந்தந்த பதவிகளை வகிக்க முடியும் என நீதித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும், நீதிமன்றின் முன்னிலையில் அமைச்சர்களின் இரட்டை குடியுரிமையை தெளிவாக நிரூபிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
இரட்டை குடியுரிமையைப் பெற்றுக் கொண்டுள்ள அரச அதிகாரிகளுள் வெளிநாட்டு தூதரகங்களில் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் காணப்படுபவர்கள் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்ற கீதா குமாரசிங்க மற்றும் டயானா கமகே போன்றோரின் அமைச்சுப் பதவிகள் நீண்ட விசாரணைகளின் பின்னர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் கீழ் பதவி நீக்கப்பட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிலையாகும் முன் அமெரிக்கக் குடியுரிமையை சட்டரீதியாக நீக்கிக்கொண்டார்.
பசில் ராஜபக்ச இரட்டை குடியுரிமை தொடர்பில் அரசியல் வட்டாரங்களில் அதிகளவில் பேசப்பட்டாலும், அவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அந்தப் பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன.