டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத் தொடர்பாகத் தமக்கு எதுவும் தெரியாதென இலங்கைத் தோ்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேசியப் பட்டியலில் டயானா கமகேயின் பெயர் இடம்பெற்றிருந்தபோது, அவர் வெளிநாட்டுப் பிரஜை என்பது உங்களுக்குத் தெரியாதா என வினவியபோதே தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரியொருவர் இவ்வாறு பதலளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டப்பூர்வ தகுதி எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்திருந்தது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத், பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ள டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
அதிகாரபூர்வ தகவல்
உச்ச நீதிமன்றத்தால் இவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் சபாநாயகா் அதிகாரபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்த பின்னரே அது குறித்த கருத்துக்களை தம்மால் வெளியிட முடியும் என்றும் ஆணைக்குழு அதிகாரி தெரிவித்தார்.
இரட்டை பிரஜாவுரிமையுடன் கூடியவர்கள் இலங்கை நாடாளுமன்றில் உறுப்பினராகலாம் என்ற முறைமை அமுலில் இல்லாவிட்டாலும் கூட கடந்த ஆட்சியில் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
எவ்வாறாயினும் நீதிமன்றத் தீர்ப்பினால் எதிர்வரும் காலங்களில் இரட்டைப் பிராஜவுரிமை உள்ள எவரும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.