எகிப்துக்கும் காசாவுக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியான ராஃபாவில் இஸ்ரேலிய படைகள் தீவிர தாக்குதல்களை நடத்திவரும் பின்புலத்தில் இன்று புதன்கிழமை காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில், கெரெம் ஷாலோம் எல்லையை இஸ்ரேல் திறந்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர கைதிகள் விடுதலைக்கான உடன்படிக்கை தொடர்பில் மூன்றாம் தரப்பு நாடுகளின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்காத பின்புலத்தில் ராஃபாவில் இஸ்ரேலிய படை தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
என்றாலும், காசாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ராஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்கள் தொடர்பில் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமலேயே இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எகிப்து மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் மேற்கொண்டுவரும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால், இஸ்ரேல் இந்த உடன்படிக்கையானது தங்களின் கோரிக்கைகளை நிறைவு செய்யவில்லை எனக் கூறியுள்ளதுடன், ராஃபாவில் இருந்து ஹமாஸ் போராளிகளை ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
நான்கு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்ட ரொக்கெட் தாக்குதலுக்கு பதிலடியை கொடுக்கும் விதமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கெரெம் ஷாலோம் எல்லைப் பாலம் இஸ்ரேலிய படையினரால் மூடப்பட்டது.
இதனால் காசாவுக்கான மனிதாபிமான உதவிகள் பாரிய அளவில் தடைப்பட்டிருந்தன. இதற்கு எதிராக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்ததால் மீண்டும் எல்லையை இஸ்ரேல் திறந்துள்ளது.