2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று (06) ஆரம்பமாகின்றது.
நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
மொத்தமாக 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்ற நிலையில், 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சில விசேட வைத்திய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
நாட்டில் தற்போது மிகவும் வெப்பமான காலநிலை நிலைவரும் நிலையில், அது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் திரவ பானங்களை உட்கொள்வது பொருத்தமானது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சைக்கு செல்லும் போது குடையோ அல்லது வெயிலில் படாதவாறு மறைப்பதற்கு பொருத்தமான ஒன்றையோ பயன்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நுளம்புகள் பெருகக்கூடிய பரீட்சை நிலையங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், விசேட துப்புரவு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹரித அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.