கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் வாக்காளர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு செலுத்திய வீட்டு சின்னம் இன்று திரிசங்கு நிலையில் உள்ளது.4
இந்த சின்னத்திற்கு இரட்டை மதிப்பு விடுதலைப் புலிகளின் ஒப்புதலுடன் வாக்காளர் மத்தியில் அறிமுகமான சின்னம் என்பதாலேயே தான் அதிகமான தமிழ் மக்கள் வாக்களிக்கும் நிலை காணப்பட்டது.
இவர்களின் தவறுகள் செயலற்ற நிலை ஆகியன இருந்தும் பொருத்தமற்ற, தகுதியற்ற வேட்பாளர்கள் கூட வெற்றி பெறும் நிலை காணப்பட்டது.
அதை இலாபகரமாக பயன்படுத்திய பலர் முன் கதவாலும் பின்கதவாலும் உள் நுழைந்தனர். இன்னும் சிலர் நுழைவதற்கு காத்திருக்கின்றனர்.
எந்த வலியும் இல்லாமல் அதிகாரத்தை சுவைப்பதற்கு மிக இலகுவான இடமாக பலர் தெரிவு செய்தனர். மாற்றுக் கட்சிகளில் வெற்றி பெற முடியாதவர்கள் கூட நாடி வந்தனர்.
ஒரு கட்டத்தில் கொள்கை, கோட்பாடு, இலட்சியம், தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் எல்லாம் மறந்து கோட்பாடற்றவர்களின் கூடாரமாக மாறிவிட்டது.
இதில் மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவம் என்பது மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதால் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிக் கொண்டிருக்கிறது.
ஆகவே 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவர்கள் மீதான நம்பிக்கை தமிழ் மக்களுக்கு குறையவே ஆரம்பித்திருக்கிறது. அதன் நீட்சி தான் இன்றைய பரிதாப நிலையும் தொடர் தேர்தல் வீழ்ச்சியும். இந்த நிலை தொடர்ந்தால் எதிர்கால தேர்தல்களில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படலாம்.
எனவே வழக்கிலிருந்து இலகுவாக மீள்வதற்குரிய வழியை காணாமல் மூன்று பிரிவுகளாக இருந்து தமது வாதங்களை முன் வைப்பது மிகப் பெரிய முட்டாள்தனம்.
ஏழு பக்க யாப்பை புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் மூத்த அரசியல்வாதியாக இருப்பதிலும் பல வருட பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர்வதிலும் எந்த அர்த்தமும் இல்லை.
கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் மிகத் தவறானது. கட்சியின் எதிர்காலம் தொடர்பாக நின்று நிதானித்து அவதானித்து சிந்திப்பதை விடுத்து உணர்ச்சிவசப்பட்டு எழுமாறாக முதிர்ச்சியற்ற தீர்மானம் எடுப்பது எழுபது ஆண்டுகளை கடந்த கட்சியை எள்ளி நகையாடும் விடயமாகும்.குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போல் ஆகிவிட்டது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தன்னைச் சுற்றி சூழ்ச்சி செய்வதாக கூறுகிறார். இதில் மிகவும் வேடிக்கையான சிறுபிள்ளைத்தனமான வார்த்தை அரசியல் என்பதே சூழ்ச்சிதான், தான் செய்வதும் சூழ்ச்சி அரசியல் தான்.
சூழ்ச்சி இல்லாமல் தேர்தல் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியுமா? தமிழரசு கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்குரிய யுக்தியாக பயன்படுத்தியதே தமிழ்த் தேசியம் எனும் வாதமே.
இந்த உலகத்தில் சூழ்ச்சி செய்யாத சூழ்ச்சி தெரியாத எந்த அரசியல்வாதிகளுமே அரசியலில் நின்று நிலைத்ததாக சரித்திரமில்லை. இலக்கியங்கள் புராணங்களில் இல்லாத சூழ்ச்சியா? இது எல்லாம் அறிந்து உணர வேண்டும்.
வலியில்லாமல் பதவிக்கு வந்ததன் விளைவு தான் சிறிதரனின் சூழ்ச்சி வாசகம், ஒரு அரசியல் கட்சியில் அங்கத்தவராக சேர்ந்து நோட்டீஸ் ஒட்டுவதில் தொடங்கி படிப்படியாக வளர்ந்து வந்தால் தான் அதன் உழைப்பு புரியும்.
அது இல்லாமல் அடிப்படை அங்கத்தவரே ஆக முதலில் பாராளுமன்ற உறுப்பினராக ஆகுவது கூட்டமைப்பில் மட்டுமே தமிழ் தேசியம் என்னும் மாயவித்தை பதவி சுகம் கொடுப்பதால் இலகுவாக இலக்கை ஏட்டிவிடுகின்றனர்.
அதனால் தான் இந்த சூழ்ச்சிகளை அறிந்து உணர்ந்து கொள்ள முடியவில்லை போல, எனவே யாவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து செல்லும் வழிமுறையை கடைபிடிக்க வேண்டும்.
ஏட்டிக்கு போட்டியாக எதிர்வாதம் செய்வதில் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை, தான் நேசிப்பதாக கூறும் தமிழ்த் தேசியத்திகோ அல்லது தமிழ் மக்களுக்கோ அல்லது சிறிதரனுக்கோ எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
எனவே, பகைமையை மற்றது சினம் கொள்வதை தவிர்த்து துரோகி தியாகி பட்டம் கொடுப்பதை நிறுத்தி நிதானித்து அறிவார்ந்து நோக்கு நிலையில் எதிர்கால இருப்பு பற்றி விருப்பு வெறுப்பு இன்றி ஆராய்ந்து அறிந்து தெளிந்து கூட்டு பொறுப்புடன் அணிகளற்று முன்னோக்கி நகர்வதற்குரிய வழி வரைபடத்தை உருவாக்க வேண்டியதே காலத்தின் கட்டாயமும் சிறிதரன் மேல் காலம் சுமத்தியுள்ள பெரும் பொறுப்பும் ஆகும்.
தவறுகளையும், கடந்த காலத்தைப் பற்றியும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் எவரையும் நேசிக்கவும் முடியாது எதுவும் சாதிக்கவும் முடியாது.
ஆகவே உடனடியாக கட்சியின் மத்திய குழுவை கூட்டி முரண்பாடுகள் அற்ற சமன்பாடுகளில் கட்சியை நகர்த்துவதற்கு என்ன வழி என்பதை மட்டும் ஆராய்ந்து தீர்க்கமான ஒரு கூட்டு முடிவுக்கு வருவதே ஒரே வழியும் அறிவார்ந்த தலைமைக்குரிய அடையாளமும் ஆகும்.
எத்தனை ஜனாதிபதி சட்டத்தரணிகளை வைத்து நீதிமன்றத்தில் வாதாடினாலும் கட்சியின் நலனுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப் போவது இல்லை, தீரப்பேவதுமில்லை.
காலநீட்சியே ஏற்படும் காலம் கடக்க கடக்க ஆதரவாளர்கள் தொண்டர்கள் வாக்காளர்கள் மனச்சோர்வு ஏற்பட்டு மாற்றுக் கட்சிகளை நாடி விடக்கூடிய மிகப்பெரிய ஆபத்து உண்டு.
எனவே வறட்டு வாதங்களாலும், நேற்றைய பகைமைகளாலும் பொது வாழ்வில் எதனையும் சாதிக்க முடியாது. மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள இன விடுதலை அரசியலை மேலும் வலிமையற்ற நிலைக்கு இட்டுச் செல்லும் செயலாகவே அமையும் கட்சியின் எதிர்கால இருப்புக்கு அது உகந்தது அல்ல.
ஜனநாயகத்தை காக்கவும், மக்களாட்சி தத்துவத்தை போற்றவும் நாட்டில் அரசியல் கட்சிகள் மிகவும் அவசியமானவை. இதை உணர்ந்து செயலாற்றாவிட்டால் தலைவர்கள் யாவரும் காலத்தால் காணாமல் போய்விடுவார்கள்.
ஆகவே இன விடுதலை அரசியலில் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கப் போகிறீர்களா? அல்லது உங்களுக்குள் தொடர்ந்து வழக்காடு மன்றங்களுக்குள் கட்சி வாதங்களை முன்னெடுத்து காலங்களை வீணடிக்க போகிறீர்களா? என மக்கள் உங்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்