லிதுவேனியாவிற்கு சாரதி வேலைக்காகச் சென்ற 106 இலங்கையர்களில் இரண்டு பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே இவர்கள் இருவரும் நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாரதி வேலைக்கு செல்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றிற்கு 12 இலட்ச ரூபாவை இவர்கள் செலுத்தியுள்ளனர். இவர்களுடன் இணைந்து மேலும் 104 பேர் லிதுவேனியாவுக்குச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கு மாத்திரம் கனரக வாகன சாரதி வேலை
இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக அழைத்துச் செல்லப்பட்ட குழுவினரில் இருவருக்கு மாத்திரமே கனரக சாரதி வேலை வழங்கப்பட்டுள்ளது.
மற்றைய அனைவருக்கும் பல்வேறு வகையான வேலைகள் வழங்கப்பட்ட போதிலும், குறித்த இருவர் பன்றி மேய்ப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நாடு திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
கனரக வாகன சாரதிகளுக்கான வேலைக்கு தகுதியிருந்தும் இவர்களில் சிலர் பன்றி வளர்ப்பு வேலைக்கு அனுப்பப்பட்டமையானது மிகவும் அசாதாரனமானது எனவும் அவர்கள் சுட்டிகாட்டியிருந்தனர்.
குடியிருப்பு விசா இரத்து
குறித்த இருவருக்கும் லிதுவேனியா அரசால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டிருந்த குடியிருப்பு வீசா இரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களின் நாளாந்த குடியிருப்பு செலவும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், ஒரு நாளைக்கு 10 யூரோக்கள் விகிதம் தங்குமிடத்துக்கு செலவழித்துள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
வீசா இரத்து செய்யப்பட்டமை தொடர்பிலும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பிலும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இவர்கள் இருவரும் நாடு திரும்பியுள்ளனர்.
மேலும், லிதுவேனியாவிலிருந்து இலங்கை வர இவர்கள் சுமார் 35 இலட்ச ரூபா செலவிட்டுள்ளனர்.
இதற்காக இவர்களுடைய இலங்கை வீட்டையும் அடகுவைத்து இந்தப் பணத்தை செலவிட்டதாகவும் அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.
மேலும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு அவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.