ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்ய இராணுவத்திற்கு கூலிப்படையாக அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆட்கடத்தல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னரே இவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்ய இராணுவ தளங்களை சுத்தம் செய்யும் சேவைக்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட இந்த பணியாளர்கள் ரஷ்ய-உக்ரைன் போருக்கு கூலிப்படையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆள் கடத்தலில் ஈடுபட்ட இந்த இரண்டு சந்தேகநபர்களும் அதிகளவான இலங்கையர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் இருந்து ரஷ்யா சென்றவர்கள் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வாரியபொல மற்றும் திகன பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் இருந்து தப்பி வந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர், இலங்கை இராணுவத்தின் கணிசமான எண்ணிக்கையிலான ஓய்வுபெற்ற உறுப்பினர்கள் ரஷ்ய – உக்ரைன் போரில் கூலிப்படையாகச் செயற்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.