வெளிநாட்டவருக்கான வீசா கட்டண அதிகரிப்பால் சுற்றுலாத்துறை ஸ்தம்பிதமடையும் அபாயம் காணப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலையொன்றிற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று வியாழக்கிழமை (18) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலம் கருத்து தெரிவித்து சஜித் பிரேமதாச
”சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சி கண்டுள்ள நிலையில் அரசாங்கம் திடீரென வெளிநாட்டவருக்கான வீசா கட்டணத்தை அதிகரித்துள்ளது.
சார்க் நாடுகளில் உள்ள வெளிநாட்டினருக்கு 20 முதல் 35 டொலர் வரையிலும், சார்க் அல்லாத நாடுகளில் உள்ள வெளிநாட்டினருக்கு 50 முதல் 75 டொலர் வரையிலான சேவைக் கட்டணமும், மேலதிக கட்டணமும் அறவிடப்படுகின்றது.
சார்க் அல்லாத நாடுகளின் வீசா கட்டணம் 100 டொலர்களைத் தாண்டியுள்ளதுடன் சார்க் நாடுகளுக்கான வீசா கட்டணம் 58 டொலர்களை தாண்டியுள்ளது இதன் காரணமாக வளர்ச்சி கண்டுள்ள சுற்றுலாத்துறை ஸ்தம்பிதமடையும் அபாயம் காணப்படுகின்றது.
ரஷ்யாவில் இருந்து ரெட் விங்ஸ் என்ற விமானம் மூலம் சுமார் 800 சுற்றுலாப் பயணிகள் நமது நாட்டிற்கு வருகை தரவிருந்தனர்,என்றாலும் அதுவும் தற்போது கைவிடப்பட்டுள்ளது .
இது போன்ற முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், உரிய ஆய்வு நடத்தப்பட்டதா என்பதை கருத்திற் கொள்ள வேண்டும்.
தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மாலைதீவு மற்றும் மாலி போன்ற நாடுகளுக்கு வீசா சலுகையும், வீசா கட்டணமும் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நேரத்தில், இலங்கையில் 100 டொலரிற்கும் அதிகமான தொகை அறவிடப்படுகின்றது. முட்டாள்தனமா தீர்மானமொன்றை அரசாங்கம் எடுத்துள்ளது” என குற்றம் சுமத்தியுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணி கடந்த பதினேழாம் திகதி முதல் ஆரம்பமானது.