ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்குச் சிலர் சூழ்ச்சி செய்தாலும் அக்கட்சி ஆதரவாளர்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார்.
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108ஆவத ஜனன தின நிகழ்வில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இது சவால் மிகு வருடமாகும். தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எனவே, சூழ்ச்சிகளுக்கு அடிபணியாது கட்சியை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சுதந்திரக் கட்சியை யானை வாலுடன் முடிச்சுப் போடுவதற்குச் சிற்சில குழுக்கள் முற்பட்டாலும் அக்கட்சி ஆதரவாளர்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள்.” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சு.கவின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயல்பட விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.