இலங்கையில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை இன்று (10.04.2024) வெளியிட்டுள்ள புதிய விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் “போராட்டங்களின் போது சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்துதல்“ என்ற அறிக்கை, 2022 மார்ச் மற்றும் 2023 ஜூன் மாதங்களுக்கு இடையில் நடைபெற்ற 30 போராட்டங்களின் போது பலாத்காரத்தைப் பயன்படுத்தியதை பகுப்பாய்வு செய்கிறது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்த ஆய்வு, கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கியை சட்டவிரோதமாகப் பயன்படுத்ததியமை, சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளால் தடியடிகளை தவறாகப் பயன்படுத்தியமையை வீடியோ ஆதாரத்துடன் வெளிப்படுத்துகிறது.
அதிகாரிகள் சர்வதேச சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தரம் மோசமான வகையில் நடந்துக்கொண்டுள்ளனர்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்பதையும், போராட்டங்களை எளிதாக்குவதும் பாதுகாப்பதும் அதிகாரிகளின் கடமை என்பதையும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகள் அங்கீகரிக்கத் தவறிவிட்டனர்.
”அமைதியான எதிர்ப்பாளர்களைக் குறிவைத்து, துரத்தினார்கள், அடித்தார்கள்” என்று அம்னஸ்டி இன்டர்நேஷனலின் தெற்காசியாவிற்கான பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங் கூறினார்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், இலங்கையர்கள் எதிர்கொண்ட நீண்டகால பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்கள், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட “அரகலயா“ என அழைக்கப்படும் போராட்டங்களின் போது சட்டத்தை பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்திய விதம் சட்டவிரோதமானது என சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது.
2022, 2023, 2024 ஆம் ஆண்டுகள் உட்பட இன்றுவரை தொடரும் பெரும்பாலும் அமைதியான போராட்டங்களுக்கு எதிராக சட்டத்திற்குப் புறம்பான சக்தியைப் பயன்படுத்துவதை சர்வதேச மன்னிப்புச் சபை ஆவணப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அமைதியான போராட்டங்களுக்கு பாதுகாப்பு படையினரும், புலனாய்வு அமைப்புகளும் கண்காணிப்பு, அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் இடையூறுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச மன்னிப்புச் சபை தனது விசாரணையின் போது, கொழும்பு, பத்தரமுல்லை, களனி, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய இடங்களில் இருந்து 30 போராட்டங்களின் சமூக ஊடகங்களில் சேகரிக்கப்பட்ட 95 சரிபார்க்கப்பட்ட வீடியோக்களில் 39 தரமான நேர்காணல்களையும் விசாரணை அறிக்கையில் உள்வாங்கியுள்ளது.
2024 மார்ச் மாதம் சர்வதேச மன்னிப்புச் சபை, இந்த அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை கோடிட்டுக் காட்டி உத்தியோகபூர்வ பதிலைக் கோரி இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு கடிதம் எழுதியது. ஆனால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டும் நேரம் வரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளது.
அத்துடன், போராட்டங்களை ஒடுக்க சட்டவிரோத ஆயுதங்களையும் இலங்கை ஆயுதப்படைகள் பயன்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.