தேசிய மக்கள் சக்தியுடன் எந்த நேரத்திலும் விவாதத்திற்கும் தானும் தனது பொருளாதாரக் குழுவின் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புத்தளம் ஆனமடுவ கன்னங்கர மாதிரிக் கல்லூரியில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னணி நாளிதழ்களான டெய்லி மிரர் மற்றும் லங்காதீப ஆகியன அரசியல் விவாதத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த நிலையிலே, அதனை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விவாதத்திற்கு தயார் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான விவாதத்தை ஒருங்கிணைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நளினி பண்டாரவை ஐக்கிய மக்கள் சக்தி நியமித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த விவாதத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்பது நிச்சயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நளினி பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பொது விவாதத்திற்கு விடுத்த அழைப்பை ஏற்காமல், விவாதத்தை திசை திருப்பும் தேசிய மக்கள் சக்தியின் முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.