கடற்தொழில் அமைச்சரின் கபடத்தனத்திற்கு இடமளிக்க மாட்டோம்

கடற்தொழில் அமைச்சர் கபட தனமாக எமது பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ எத்தனித்து வருகிறார். அதற்கு நாம் இடமளிக்க முடியாது என அனைத்து மக்கள் ஒன்றிய வி.சிறிபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

எமது பிரதேசம் தாழ்நில பிரதேசம். கடலுக்கும் எமது நிலத்திற்கும் மூன்றடி இடைவெளியே உண்டு. அங்கு சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்டால் கடல் நீர் உட்புகுந்து எமது கிராமமே கடலில் மூழ்கிவிடும்.

எமது போராட்டக்காரர்கள் மது போதையில் நின்றார்கள் என்றும், 150க்கும் குறைவானவர்களே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என அமைச்சர் தரப்பு கூறுவது முற்றிலும் பொய். யார் மது போதையில் அங்கு வந்தார்கள் என அங்கிருந்தவர்களுக்கு தெரியும். அவர்களின் விபரங்களையும் வெளியிட தயாராக இருக்கிறோம்.

பொன்னாவெளியில் மக்கள் இல்லை என கூறுகின்றார்கள். அந்த மக்களை அங்கிருந்து துரத்தியடித்ததே இவர்கள் தான். டோக்கியோ சீமெந்து தொழிற்சாலைக்கு நிலங்களை வழங்கிய போது , அவர்கள் அங்கு ஆழ் துளை கிணறுகளை அடித்த போதே அப்பகுதியில் நிலத்தடி நீர் உவரானது. அதனாலேயே மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin