இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என்றாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
வடக்கு மலுகு மாகாணத்தில் உள்ள ஹல்மஹேரா தீவில் சுமார் 35 கிலோமீட்டர் (22 மைல்) கடல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் ஏனைய பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் “சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை” என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியை சுற்றி வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மீண்டும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்தோனேசியா, ஒரு பரந்த தீவுக்கூட்டமாக இருப்பதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுலவேசி தீவை உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயிருந்தன. அத்துடன், ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை இழிந்து வீடற்றவர்களாக மாறினர்.
2018 ஆம் ஆண்டில், சுலவேசியில் உள்ள பாலுவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 2,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் 2004 ஆம் ஆண்டில், ஆச்சே மாகாணத்தில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சுனாமியை ஏற்படுத்தியது மற்றும் 170,000 க்கும் அதிகமான மக்களின் உயிர்களும் பறிபோயிருந்தன.