கட்சிகளின் விருப்பத்துக்கேற்ப நாட்டை கட்டியெழுப்ப முடியாது: ரணில்

கட்சியின் தேவைக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்கவன்றி பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு சென்று நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாதிருக்க பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இன்று (06) அனுராதபுரம் மாவட்ட சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மைக்கால நிகழ்வுகள் காரணமாக நாட்டின் ஜனநாயகம் ஆட்டம் கண்டுள்ளது என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து நாட்டை முன்னெடுத்துச் செல்லுமாறு சட்டத்தரணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கியதுடன் சட்டத்தரணிகள் தமது தொழில்சார் கோரிக்கைகள் சிலவற்றையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

ஜனாதிபதி, கோரிக்கைகள் பலவற்றிற்கு அதே நேரத்தில் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்ததுடன், அனுராதபுர சட்டத்தரணிகளின் தொழில் அந்தஸ்தை உயர்த்தும் வகையில் சட்டத்தரணி ஓய்வறை நிர்மாணிப்பதற்கு பணம் ஒதுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

இங்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நான் இங்கு வரவில்லை. ஜனாதிபதியாக உங்கள் அனைவருக்காகவும் பணியாற்றுகின்றேன்.

இப்போது நாம் பாரம்பரியமாக நினைத்த காலம் முடிந்துவிட்டது. பாரம்பரிய அரசியலின் காரணமாகவே இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.

நாட்டின் தேவைக்கேற்ப கட்சி அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். கட்சி அமைப்பின் விருப்பப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அதைச் செய்யப் போனதால்தான் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனை யாரும் பொறுப்பேற்கவில்லை. கடைசிவரை யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை.

மிகவும் மோசமான காலகட்டத்தை கடந்து வந்துள்ளோம். எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீதியில் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த நிலைக்கு நாம் திரும்ப வேண்டுமா என்று எல்லோரிடமும் கேட்க விரும்புகிறேன்.

இந்த நாட்டில் ஜனநாயகம் எங்கிருந்தது என்பதை இன்று நாம் மறந்துவிட்டோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர் பிரதமராக வேண்டும். இல்லையெனில், வேறு யாராவது பிரதமராகலாம்.

பிரதமரின் வீட்டை எரித்துவிட்டு வெளியேறச் சொன்னால், எதிர்க்கட்சிகள் பிரதமரை இராஜினாமா செய்யச் சொன்னால், நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன். இங்கிலாந்து போன்ற நாட்டில் இது நடந்தால் என்ன நடக்கும், எனவே இப்போது நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். அதன்போது நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். திருடர்களை தண்டிப்போம் என சில தரப்பினர் கூறுகின்றனர். நாங்கள் திருட்டுக்கு எதிரானவர்கள். ஆனால் கட்சியிகளுக்கு அவர்களை தண்டிக்க முடியாது.” என்றார்.

Recommended For You

About the Author: admin