ரயில் இயந்திர பராமரிப்புக்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் பராமரிப்புக்கு தேவையான உதிரி பாகங்கள் இல்லாததால் ஏற்படக்கூடிய ரயில் தடம் புரள்வு , தாமதம் மற்றும் ரத்து போன்ற காரணங்களால் பயணிகள் கடும் இன்னல்களை சந்திக்க நேரிடுவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 20-30 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், நாளாந்தம் ரயில்களில் தாமதம் ஏற்படுவதாகவும் கடந்த சில வாரங்களில் இரண்டு ரயில் தடம் புரள்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சங்கத்தின் இணை அழைப்பாளர் எஸ். பீ விதானகே தெரிவித்தார்.
முறையான பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் இயந்திர பராமரிப்பு தொடர்பான உதிரி பாகங்கள் பற்றாக்குறை , இயந்திரங்கள் தொழில்நுட்ப கோளாறுகளால் காரணமாக பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்களத்தில் 20,222 ஊழியர்கள் இருக்க வேண்டும், எனினும், தற்போது கிட்டத்தட்ட 14,000 ஊழியர்கள் மாத்திரமே காணப்படுவதாகவும், வெற்றிடங்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட 6,000 பயிற்சி பெற்ற ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும் , இம்மாதம் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் அமுல்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்திருந்த போதிலும், அது தொடர்பான சேவைகளை பயன்படுத்த ஊழியர்களை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் தயாரிக்கப்படவில்லை எனவும் அவர் வலியுறுத்தியள்ளமை குறிப்பிடத்தக்கது.