கடுகளவு மாற்றம் ஏற்பட்டாலும் மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படுவோம்

பூஜ்ஜியமாகக் குறைந்து போயிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு இன்று 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலான பணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெறுவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.

பின்னர் கடன் மறுசீரமைப்பு குறித்தும் ஆராயப்பட்டது. அதனால் தற்போது நாடு சுமூகமான பொருளாதார நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை விருப்பமின்றியேனும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அந்த நேரத்தில் டொலரின் பெறுமதி 400 ரூபாவிற்கு கிட்டியதாக காணப்பட்டது. ஆனால் இன்றளவில் டொலரின் பெறுமதி 300 ரூபாவை விடவும் குறைந்துள்ளது. அதனால் இறக்குமதிப் பொருட்களுக்கான கொடுப்பனவுகளும் குறைவடைந்திருக்கிறது.

பூஜ்ஜியமாகக் குறைந்து போயிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு இன்று 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

நிலுவைத் தொகையின் நடப்புக் கணக்கில் உபரி ஏற்பட்டுள்ளது. அதன்படி, ரூபாயின் பெறுமதி அதிகரித்திருக்கிறது. பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக அரச வரவு செலவுத் திட்டத்தின் முதன்மைக் கணக்கில் உபரி ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும். அத்தோடு நாட்டின் எதிர்காலமும் கேள்விக்குரியாகிவிடும்.” என்றார்.

Recommended For You

About the Author: admin