கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மைஃபெப்ரிஸ்டோன் (Mifepristone) என்ற மருந்தை மக்கள் அணுகுவதைத் தடுக்க முடியுமா? என்பதைத் தீர்மானிக்க அமெரிக்காவில் ஒரு வழக்கு நடந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கருக்கலைப்பு மருந்து 2000ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக உள்ளது. மேலும் 2016ஆம் ஆண்டு முதல், அதைச் சுற்றியுள்ள சட்டங்கள் படிப்படியாக தளர்த்தப்பட்டன.
நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக விதிகளில் சமீபத்திய மாற்றங்கள் காரணமாக மருந்துகளை அஞ்சல் மூலம் அனுப்பவும், மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் பெறவும் அனுமதி வழங்கப்பட்டது.
கருக்கலைப்புக்கு எதிராக மருத்துவர்கள் மற்றும் ஆர்வலர்களின் ஒரு சிறிய குழுவான அலையன்ஸ் ஃபார் ஹிப்போக்ரடிக் மெடிசின் (Alliance for Hippocratic Medicine)இன் சட்டரீதியான சவால் வெற்றியடைந்தால்,
கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்தை எளிதில் அணுகுவதைத் தடுக்க முடியும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டில் கருக்கலைப்பு உரிமைகளை வழங்கிய ஒரு முக்கிய முடிவான ரோ மற்றும் வேட் தீர்மானத்தை இரத்து செய்த பிறகு, அமெரிக்காவின் பல மாநிலங்கள் கருக்கலைப்புகளை முற்றிலும் தடை செய்துள்ளன.
தற்போது நடைபெற்று வரும் கருக்கலைப்பு மருந்து வழக்கு மீதான முடிவு எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில் எங்கு கருக்கலைப்பு சட்டவிரோதமானது?
இனப்பெருக்க உரிமைகளுக்கான மையத்தின் தரவுகளின்படி, சுமார் 21 நாடுகள் கருக்கலைப்பை முற்றிலும் தடை செய்துள்ளன.
பல நாடுகளில் கருக்கலைப்புக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்கள் குறித்து கடுமையான விதிகள் உள்ளன. அதன்படி, இது தாயின் உயிரைக் காப்பாற்ற அல்லது கற்பழிப்பு அல்லது விபச்சார வழக்குகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
ஆபிரிக்காவில், பெரும்பாலான நாடுகளில் கடுமையான கருக்கலைப்பு சட்டங்கள் காணப்பட்ட போதிலும் தென்னாப்பிரிக்கா மற்றும் மொசாம்பிக் உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் சட்டங்கள் இல்லை. காங்கோ, செனகல், சியரா லியோன், மொரிட்டானியா, மடகாஸ்கர் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கருக்கலைப்புக்கு தடை விதித்துள்ளன.
உலகளாவிய ரீதியில் கருக்கலைப்புக்கான விதிகள்
ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான நாடுகள் பொருளாதார அடிப்படையில் கருக்கலைப்புக்கு அனுமதிக்கின்றன.
கர்ப்பிணிப் பெண்ணின் சமூக அல்லது பொருளாதார சூழ்நிலைகள் உட்பட, குழந்தை பிறக்கும் சாத்தியமான தாக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு அல்லது கோரிக்கையின் பேரில், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளும் தேவைக்கேற்ப கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கின்றன.
அமெரிக்காவில், நிலைமை மிகவும் சிக்கலானது. கர்ப்பத்தின் 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை 2022ஆம் ஆண்டில் இரத்து செய்யப்பட்டதால், இப்போது சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மைஃபெப்ரிஸ்டோன் (Mifepristone) என்றால் என்ன, அது உலகில் எங்கு பயன்படுத்தப்படுகிறது?
மருத்துவ கருக்கலைப்பின் இரண்டு-படி செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் முதல் மருந்து மைஃபெப்ரிஸ்டோன் (Mifepristone) ஆகும். கர்ப்பம் தொடர்வதற்குத் தேவையான புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனைத் தடுப்பதன் மூலம் இது செயல்படுகிறது. இரண்டாவது மருந்து, மைஃபெப்ரிஸ்டோல் (misoprostol), கருப்பையின் உள்ளடக்கங்களை அகற்ற பயன்படுகிறது. அமெரிக்க ஆய்வுகள் இந்த இரண்டு-படி விதிமுறை 95 வீதம் பயனுள்ளதாக இருப்பதாகக் காட்டுகின்றன.
மைஃபெப்ரிஸ்டோன் (Mifepristone) முதன்முதலில் பிரான்சில் 1988ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது. Gyunity இன் தரவுகளின்படி, இது தற்போது 96 நாடுகளில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆர்ஜென்டினா, ஈக்வடார், ஜப்பான் மற்றும் நைஜர் ஆகியவை அதன் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தன.
பாதுகாப்பற்ற கருக்கலைப்பைக் குறைப்பதற்கான வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக mifapristone மற்றும் misoprostol கொண்டு கருக்கலைப்பு செய்வதை உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
மைஃபெப்ரிஸ்டோனின் பக்க விளைவுகள் என்ன, அது பாதுகாப்பானதா?
மைஃபாப்ரிஸ்டோனை எடுத்துக் கொண்ட பிறகு தசை பிடிப்பு மற்றும் பிறப்புறுப்பு இரத்தப்போக்கு ஏற்படும். இது பொதுவாக மருந்து வேலை செய்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.
பொதுவான பக்க விளைவுகளில் குமட்டல், உடல் பலவீனம், காய்ச்சல், குளிர், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் தலைச்சுற்றல் ஆகியவை அடங்கும்.
மைஃபாப்ரிஸ்டோன் மற்றும் மைஃபெப்ரிஸ்டோல் ஆகியவை பாதுகாப்பானவை என்றும், இரண்டு மருந்துகளும் அவற்றின் அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
கருக்கலைப்பு எதிர்ப்பு குழுக்கள் இந்த கருக்கலைப்பு மருந்துகள் ஆபத்தானவை மற்றும் பயனற்றவை என்று நீண்ட காலமாக கூறி வருகின்றன. அவர்கள் அதை “இரசாயன கருக்கலைப்பு” என்று அழைக்கிறார்கள்.
இருப்பினும், உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க மருத்துவ சங்கம் போன்ற முன்னணி மருத்துவ நிறுவனங்கள் அவர்களின் கூற்றுகளுடன் உடன்படவில்லை.
உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கூற்றுப்படி, மைஃபாப்ரிஸ்டோனைப் பயன்படுத்துபவர்களில் ஒரு மில்லியனில் ஐந்து பேர் மட்டுமே இறந்துள்ளனர்.