பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்டில், இலங்கை அணி 531 ஓட்டங்களை குவித்துள்ளது.
இது தனிநபர் சதம் இல்லாமல் டெஸ்ட் போட்டியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். எனினும், இலங்கை அணி சார்பில் ஆறு வீரர்கள் அரைசதத்தைப் பதிவுசெய்துள்ளனர்.
தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் சதங்களின் உதவியுடன், சில்ஹெட்டில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், சட்டோகிராமில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி, முதல் நாள் ஆட்ட முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 314 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி இரண்டாம் நாளில் 531 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர்.
நிஷான் மதுஷ்கா (57), திமுத் கருணாரத்ன (86), குசல் மெண்டிஸ் (93), தினேஷ் சந்திமால் (59), தனஞ்சய டி சில்வா (70), மற்றும் மெண்டிஸ் (92 ஆட்டமிழக்காது) ஆகிய ஆறு பேரும் அரைச்சதம் கடந்தனர்.
பங்களாதேஷ் அணி சார்பில் ஷாகிப் அல் ஹசன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இலங்கை அணியின் இந்த ஓட்டமானது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனிநபர் சதம் இல்லாமல் அடிக்கப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
முன்னதாக 1976 ஆம் ஆண்டு கான்பூரில் இடம்பெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 524 ஓட்டங்களை குவித்திருந்திருந்தது.
இதன்போதும் ஆறு வீரர்கள் அரைச்சதம் கடந்திருந்தனர். அதிகபட்சமாக மொஹிந்தர் அமர்நாத் 70 ஓட்டங்களை குவித்திருந்தார். யாரும் சதம் அடித்திருக்கவில்லை.
இதுவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனிநபர் சதம் இல்லாமல் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இதுவரைகாலம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த சாதனை இலங்கை அணியால் முறியடிக்கப்பட்டுள்ளது.