
ரஷ்ய-உக்ரைன் போரில் இரு தரப்பிலும் பலர் கூலிப்படையாக செயற்படுகின்றனர்.
அதற்காக அவர்களுக்கு மாதாந்திர சம்பளம் லட்சங்களில் வழங்கவும், போரில் இறந்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அந்தந்த நாடுகளுக்கு அழைத்து வந்து குடியுரிமை வழங்கவும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு ரஷ்ய – உக்ரைன் போரில் கூலிப்படையாகச் செயற்படும் 55 இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
27 முன்னாள் இராணுவத்தினர், எட்டு முன்னாள் கடற்படையினர், ஏழு முன்னாள் விமானப்படை உறுப்பினர்கள் மற்றும் 13 பொதுமக்கள் இவ்வாறு கூலிப்படையாகச் செயற்படுவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கூலிப்படையினராகச் சென்ற இலங்கையர்களில் குறைந்தது ஐந்து பேராவது அந்தச் சண்டைகளில் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐவர் உயிரிழப்பு
ரஷ்யாவுக்காகப் போரிட்ட இரண்டு இலங்கையர்கள் டொனெட்ஸ்கில் உயிரிழந்துள்ளதாகவும், உக்ரைனுக்காகப் போராடிய மேலும் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவும் மனிதக் கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எம். சமரகோன் பண்டா கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
உக்ரேன் மற்றும் ரஷ்யப் படைகளுடன் தொடர்புடைய வெளிநாட்டுப் படைகளில் இணைந்து கொள்வதற்காக ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிய 30 இலங்கையர்களின் பெயர்கள் மற்றும் அங்கிருந்து வெளியேறத் தயாராகி வரும் 36 பேரின் பெயர்கள் மற்றும் முகவரிகள் அரச புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதனையடுத்து மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் டி.ஐ.ஜி ரொஹான் பிரேமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எம். சமரகோன் பண்டா தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய முன்னாள் படைவீரர்கள் மற்றும் உள்ளூர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் வலையமைப்புகளைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இரு சந்தேகநபர்கள் கைது
உக்ரைனில் மோதல் பிரதேசங்களுக்கு மக்களை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கடவட பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த இரு சந்தேக நபர்களை இம்மாதம் முதல் வாரத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தும் பெண் ஒருவருக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் தலா ஒரு மில்லியன் ரூபாவை வைப்பிலிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் முதலில் டெல்லி, பின்னர் போலந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அஜர்பைஜான் வழியாக உக்ரைனை அடைந்தனர்.
இவ்வழியாக பயணித்த 55 பேரில் 23 பேர் உக்ரைன் இராணுவத்தின் வெளிநாட்டு படையணியில் இணைந்து கொள்ள முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், இந்த 55 பேரில் 32 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் சிலர் போலந்து, அஜர்பைஜான், ஜோர்ஜியா மற்றும் இத்தாலியில் வேறு வேலைகளைப் பெற்றுள்ளனர்.
அவர்களில் ஒன்பது பேர் இலங்கை திரும்பியுள்ளனர். இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 பேரில் நாடு திரும்பியவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் உக்ரைனில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக கடந்த வியாழக்கிழமை அல்ஜசீரா செய்தி வெளியிட்டிருந்தது.
ஏற்கனவே போரில் ஈடுபட்டிருந்த ஐந்து இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது. அவர்களில் இருவர் ரஷ்ய இராணுவத்திலும், மூன்று பேர் உக்ரைன் இராணுவத்திலும் இணைந்து பணியாற்றியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.