இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்தை மூடுவதற்கு முடிவு!

நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு நோர்வே முடிவு செய்துள்ளது.

நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு தூதரகப்பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பல நோர்வே தூதரகங்களை வலுப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

நிரந்தரமாக மூடப்படும் தூதரகங்கள்
இந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 2023 ஜூலை இறுதிக்குள் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட வெளிநாடுகளில் உள்ள ஐந்து நோர்வே தூதரகங்களை நிரந்தரமாக மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் உள்ள தூதரகத்தை மூடும் முடிவு நோர்வேக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தூதரகம் தெரிவித்துள்ளது.

நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு நோர்வே அரசு உறுதிபூண்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நீண்டகால இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, நோர்வே ஒரு தூதரை அங்கீகரித்து இலங்கையை உள்ளடக்கிய பிராந்தியத்தில் உள்ள மற்றொரு நோர்வே தூதரகத்தை இயக்க எதிர்பார்க்கின்றது.

நோர்வேயின் வெளிநாட்டுச்சேவை
கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம், மூடப்படும் செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் வருத்தமடைவதாக நோர்வே தூதுவர் ட்ரைன் ஜோரன்லி எஸ்கெடால் கூறியுள்ளார்.

தற்போது மாறிவரும் புவிசார் அரசியல் சூழலைக் கையாள்வதற்கும் நோர்வேயின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் நோர்வேயின் வெளிநாட்டுச் சேவை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கான பரந்த செயல்முறையின் விளைவாக இது அமைந்துள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நோர்வே 1996 இல் கொழும்பில் தூதரகத்தைத் திறந்ததுடன்,1960களில் இருந்து நோர்வே இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றது. எவ்வாறாயினும், இலங்கை நடுத்தர வருமான நிலைக்கு மாறியதால், இலங்கைக்கான நோர்வே உதவி படிப்படியாக குறைக்கப்பட்டது.

வேலை வாய்ப்பு
வடக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான ஆதரவு போன்ற பல நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களுக்கு நோர்வே தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது.

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்பட்டவுடன், இலங்கைக்கான தூதரக சேவைகள் பிராந்தியத்தில் உள்ள மற்றொரு நோர்வே தூதரகத்தில் இருந்து வழங்கப்படும்.

மேலும், இலங்கை மற்றும் மாலத்தீவில் இருந்து விசா விண்ணப்பங்களை கையாளும் விசா மையம் ஏற்கனவே புதுடில்லியில் உள்ளது.வீசா விண்ணப்பதாரர்கள், தமது நியமனங்களுக்காக கொழும்பில் உள்ள VFS அலுவலகத்திற்குச் செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor