விமான நிலையத்தில் பிடிபட்ட கனடா விசிட் விசா

நிர்மலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் வெளிநாட்டு கனவில் திரிந்து வந்த நிலையில் தற்போது பரவலாக வழங்கப்பட்டு வரும் கனடா விசிட் விசாவை பயன்படுத்தி கனடா செல்ல திட்டமிட்டார்.
அதற்கு வசதியாக அவரின் தாயாரின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகளின் குடும்பம் கனடாவில் வசித்து வந்த நிலையில் அவர்களிடம் மன்றாடி அவர்களின் மகளின் சாமத்திய வீட்டுக்கு செல்லவேண்டும் என ஸ்பொன்சர் லெட்டர் எடுத்து விசிட் விசா பெற்றுள்ளார். அதற்கு பல ஆவணங்களை supportive documents ஆக திரட்டியுள்ளார்.
துபாய் ஊடாக டொரொண்டோ செல்லும் transit விமானத்தில் ரிக்கெட் முற்பதிவு செய்து விமானநிலையத்துக்கு குறித்த நாளில் சென்றுள்ளார்.
அங்கு விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாரணைகளை தொடுக்க, மாத்தயா… சேர்.. என அரைகுறை சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் கலந்து அடித்து தான் கனடா செல்லும் நோக்கத்தை விபரித்துள்ளார். அதன்போது தனது ஒன்றுவிட்ட சித்தி குடும்பம் தன்னில் அளவற்ற அன்பில் இருப்பதாகவும், தன்னை பார்க்க துடிப்பதாகவும் கூறி, தான் இந்த சாமத்தியவீட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக அழைப்பிதழை கூரியரில் அனுப்பியுள்ளதாகவும் கூறி அழைப்பிதல் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அழைப்பிதழை பரிசீலித்த விமான நிலைய அதிகாரிகள், அவ் அழைப்பிதழின் பின் பக்கத்தில் பிள்******* அச்சகம், யாழ்ப்பாணம் என பெயர் பொறிக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் அந்த அழைப்பிதழ் பொய்யாக புனையப்பட்ட ஒன்று என்பது இறுதியாகி, நிர்மலன் விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு துரத்தப்பட்டதோடு அவரது விசா மோசடி தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
வடிவேலு மண்டையில் இருந்த கொண்டையை மறைக்க மறந்து மாட்டியது போல மாட்டிய நிர்மலனின் விமான ரிக்கெட்டுக்கான சுமார் ஐந்தரை இலட்சம் மற்றும் விமான நிலையத்துக்கு குடும்பத்துடன் வான் பிடித்து வந்த காசு.. நண்பர்களுக்கு கனடா செல்வதற்காக வைத்த பார்ட்டி காசு என பெருந்தொகையை இழந்துள்ளாராம்.
குறிப்பு: போலியாக தயாரித்த ஆவணங்களை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முற்படுவதானது இலங்கையின் 1948ம் ஆண்டின் 20ம் இலக்க குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தின் படி ஓராண்டுக்கு குறையாத மற்றும் ஐந்தாண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

Recommended For You

About the Author: admin