வெகுவிரைவில் சிறை செல்வார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் செல்வார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

“பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசைத் தோற்றுவித்தார்கள்.

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் மத்திய வங்கியை மோசடி செய்து, பொருளாதாரப் பாதிப்புக்கு வித்திட்டது.

நல்லாட்சி அரசின் அரச தலைவர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பின் பலவீனத்தை அடிப்படைவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரதூரமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்விடயத்தில் நீதிமன்றத்துக்குச் செல்லக் கூடாது, பொலிஸ் விசாரணையே இடம்பெற வேண்டும்.

கோட்டாவை போன்று எவரும் காட்டிக் கொடுக்கவில்லை

பயங்கரவாதம் தொடர்பிலும், அரசுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் ஏதேனும் தகவல் தெரிந்தும் அதனை உரிய தரப்புக்கு அறிவிக்காமல் மறைப்பது 10 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆகவே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிகடைச் சிறைக்குச் செல்வார்.

69 இலட்ச மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசை ஸ்தாபித்தார்கள்.

இலங்கை அரசியல் வரலாற்றில் கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று எவரும் மக்கள் ஆணையைக் காட்டிக் கொடுக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான மக்கள் ஆணையை ரணில் விக்கிரமசிங்கவிடமே ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டுத் தப்பியோடினார் கோட்டாபய ராஜபக்ஷ.

கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடு வெறுக்கத்தக்கது. சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் 69 இலட்சம் மக்கள் ஆணையைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.

69 இலட்சம் மக்கள் ஆணையை நாங்களே தோற்றுவித்தோம். ஆகவே, நாங்களே 69 இலட்சம் மக்கள் ஆணைக்குத் தலைமைத்துவம் வழங்குவோம்.”- என்றார்.

Recommended For You

About the Author: admin