கோட்டாபய எடுத்த தீர்மானம்: கைகழுவிய பசில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த அனைத்துத் தீர்மானங்களுக்கும் அவரே பொறுப்புக்கூற வேண்டும்.‘‘ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

இரசாயன உரத்தை தடை செய்வதற்காக கோட்டாபய எடுத்திருந்த தீர்மானம் குறித்த ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

‘‘தலைவர் ஒருவர் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் அந்த தலைவரே இறுதிப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஒரு தலைவர் முடிவுகளை எடுக்கமுன் மற்றவர்களுடன் கலந்தாலோசிக்கலாம். ஒரு முடிவு எடுக்கப்பட்டுவிட்டால் அவர்தான் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.” என பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் பொறுப்பான உறுப்பினர் என்ற வகையில் மூத்த சகோதரரான கோட்டாபய ராஜபக்சவுக்கு நீங்கள் ஆலோசனைகளை வழங்கினீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘‘ஆலோசனைகளை வழங்க முடியும். ஆனால், இறுதியாக அந்த முடிவுக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.‘‘ என பதில் அளித்துள்ளார்.

பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் இருந்து தாயகத்துக்கு திருப்பிய பின்னர் சில ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கி வருகிறார்.

இந்த அனைத்து நேர்காணல்களிலும் கோட்டாபய ராஜபக்ச, தம்மை ஆட்சியில் இருந்து அகற்ற முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டம் தொடர்பில் எழுதியுள்ள புத்தகத்தை வாசித்தீர்களா? என ஊடகவியலாளர்கள் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனால், தாம் அந்தப் புத்தகத்தை வாசிக்கவில்லை என்ற கோணத்தில் பசில் பதிலளித்து வருவதுடன், கோட்டாபயவின் சில தீர்மானங்கள் தொடர்பில் விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Recommended For You

About the Author: admin