மிகப் பழமையான மீன் இனமான முதலை மீன் (Alligator Gar) எனப்படும் சுமார் 9 அடி நீளமான மீன் இனம் கண்டி ஏரியில் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, ஏரியைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலில் பல்லுயிர் பெருக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மீன்களை மட்டுமின்றி, பறவைகளையும் உண்ணும் இந்த வகை மீன்களை, ஏரியில் இருந்து விரைவில் அகற்றாவிட்டால் அதிகரித்து, கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பான புகைப்படங்களையும் பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
முதலை போன்ற முகம் கொண்ட பெரிய மீன் ஒன்று ஏரியில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த மீன்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக கண்டி ஏரி பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி லக்நாத் யாப்பா தெரிவித்தார்.
தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் தாயகமாக வளர்ந்த இந்த வகை மீன்களை மற்ற நாடுகள் ஆக்கிரமிப்பு விலங்காக கருதுவதாகவும், அவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்து சில நாட்களில் நீர் ஆதாரங்களில் விடுவதால் எதிர்காலத்தில் கடும் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.