தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன.
ஜே.வி.பியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி அளப்பறியதென கூறும் அளவிற்கு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக, தமிழ் மக்களின் ஆதரவை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த கட்சி முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி வடக்கு தமிழர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பிற்காக நேற்றைய தினம் (16) அவர் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, எவ்வித பேதமுமின்றி புதிய அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு அனைவரும் ஐக்கியப்படுவோம் என கூறியிருந்தார்.
ஆனாலும் அநுரவின் வருகைக்கு வடக்கில் எதிர்ப்பு வெளியிடப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.
“ JVPயை எம் மண்ணில் நிராகரிப்போம். இனப்படுகொலை, போர் அவலங்கள் ஏற்படுத்திய அரசுடன் JVPயும் பிரதான பங்காளி” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும் “எத்தனையோ தமிழ், சிங்கள இளைஞர்களை அதாவது சொந்த இனத்தையே அழித்த கட்சி JVP. அவ்வாறிருக்க தங்களுடைய ஆதரவை ஒருபோதும் வழங்க மாட்டோம் என முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் அநுரவின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரவு தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.