இலங்கையின் தேசிய காட்சிகள் தமக்கு சாதகமானதொரு தேர்தலை எதிர்பார்த்து அனைத்து நகர்வுகளையும் முன்னெடுத்து வருகின்றன.
தற்போதைய சூழலில், தனித்து களமிறங்குவது சாதகமானதொரு நிலையை தோற்றுவிக்காது என்ற அடிப்படையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து கவனம் செலுத்திவருகின்றன.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் என கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே பசில் ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது நாட்டில் மக்கள் பலமும் ஒருங்கிணைத்த வலையமைப்பும் கொண்ட காட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மட்டுமே காணப்படுவதகாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தற்போதைக்கு நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஒரு தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க காணப்படுவதாகவும் பசில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலைக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்காது என ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளது.
ஆகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்தாது என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
ஆனால், பசிலின் தற்போதைய கருத்தானது ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கும் எதிர்பார்ப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது நகர்வுகளை முன்னெடுப்பதை வெளிப்படுத்துகின்றது.