இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) பெற்றிக் பிக்கரிங்கும், தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் விஜித ஹேரத்தும் பங்கேற்றனர்.
இதன்போது இன்றளவில் இலங்கையில் நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றி விரிவான உரையாடல் இடம்பெற்றது.
தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.
கனடாவில் வசிக்கின்ற இலங்கையரைச் சந்திப்பதற்கான அநுரகுமார திஸாநாயக்கவின் கனடா விஜயத்துக்கு நல்வாழ்த்துக்களையும் இதன்போது தூதுவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடனாவின் டொரொன்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட கூட்டமொன்றில் பெருமளவான தமிழ் மக்கள் கலந்துகொள்ள உள்ளதாக ஜே.வி.பியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
கூட்டத்தில் டொரொன்டோவில் உள்ள தமிழ் மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் ஜே.வி.பியின் ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்