தனது மூன்றரை வயதுடைய குழந்தையை இலங்கை பணிப் பெண்ணிடம் விட்டுவிட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதுடைய சீனப் பெண்ணொருவர் நேற்று (12) இரவு விமானத்தில் ஏறத் தயாராகிக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த பெண் தனது 58 வயது தாயுடன் துபாயில் வாடகைக்கு வீட்டில் வசித்து வருவதாகவும், இவர் பிரபல இரவு விடுதிகளில் நடனமாடி பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்றரை வயதுடைய இளைய மகள் தன்னைப் பராமரித்த இலங்கைப் பணிப்பெண்ணிடம் மிகுந்த பாசம் காட்டியுள்ளார்.
குருநாகல் பொத்துஹெரவில் வசிக்கும் 53 வயதுடைய பணிப்பெண் ஒருவரே குழந்தையை பராமரித்து வந்துள்ளார். இந்த பெண் தனது சேவையை முடித்து அண்மையில் நாடு திரும்பியுள்ளார்.
தன்னை பராமரித்த பணிப் பெண் பிரிந்தமையால் குழந்தை நோய்வாய்ப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை குறிப்பிடாது குறித்த சீனப் பெண், இலங்கைப் பணியாளரைத் தொடர்பு கொண்டு, தான் இலங்கைக்கு விஜயம் செய்ய வருவதாகவும், தன்மை அழைத்துச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறும் தெரிவித்தார்.
அதன்படி இலங்கைப் பணிப்பெ சீன பெண்ணை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், இந்த சீனப் பெண்ணும் அவரது தாயும் இளைய மகளும் கடந்த 11 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் சந்தித்து சிறிது நேரம் இன்ப உரையாடலில் ஈடுபட்ட சீனப் பெண், தனது இளைய மகளை இலங்கைப் பணிப்பெண்ணிடம் கொடுத்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்
இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்க இலங்கை பணிப்பெண் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் குறித்த பெண்ணையும் சிறுமியையும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதனையடுத்து, நேற்றிரவு (12) துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சீன பெண்ணையும் அவரது தாயையும் கைது செய்தனர்.
இந்த இரண்டு சீனப் பெண்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.