கொழும்பு – வெள்ளவத்தையில் இருந்து கிரிபத்கொட பேருந்தில் பயணம் செய்த குடும்பஸ்த்தர் ஒருவர் இளம் பெண்ணிடம் அடிவாங்கிய நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்து கல்கிசையில் இருந்து காலி வீதி வெள்ளவத்தையூடாக கிரிபத்கொட பிரதேசத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்தது.
வெள்ளவத்தைத் தரிப்பிடத்திலிருந்து பேருந்தில் ஏறிய இளம் பெண் ஒருவர் இருக்கை கிடைக்காதால் பயணிகள் நெருக்கத்துக்கு மத்தியில் நின்று பயணம் செய்தார்.
அருகில் நின்ற சுமார் அறுபத்து ஐந்து வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், பேருந்தில் பயணித்த பெண்ணை வேண்டுமென்றே உரசினார். ஆனால், குறித்த பெண் அதனைச் சகித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.
தொல்லை தாங்க முடியாத நிலையில் சிறிது நேரத்தின் பின்னர் “எஸ்கியூஸ் மீ “ (Excuse me) சற்று விலகி நிற்கிறீர்களா“ என்று ஆங்கிலத்தில் மிகவும் மரியாதையாக அந்த வயோதிபரிடம் கேட்டாள்.
வயோதிபரும் மானஸ்தன் போன்று விலகி நின்றார். இருந்தாலும் மீண்டும் அருகில் வந்து உரச ஆரம்பித்தார். பேருந்தில் பயணிகள் நெருக்கத்தினால் விலக முடியாத நிலையில் முட்டி மோதிக் கொண்டிருந்த அந்த இளம் பெண், வயோதிபரை ஆவேசமாக முறைத்துப் பார்த்தாள்.
வயோதிபரும் விடுவதாக இல்லை. பேருந்து கொழும்பு பல்கலைக்கழக தரிப்பிடத்தில் நின்றதும் குறித்த வயோதிபரின் முகத்தில் “பளார் பளார்“ என அறைந்த அந்த இளம் பெண் முகத்தில் காறியும் துப்பினாள். ஆங்கில மொழியில் சத்தமிட்டு ஏசினாள்.
வெட்கமடைந்த வயோதிபர் பேருந்தை விட்டு இறங்கி ஓட முற்பட்டபோது பேருந்துக்குள் இருந்து பயணிகள் கேலி செய்தனர். பேருந்து நடத்துனரும் தகாத வார்த்தைகளினால் வயோதிபரைத் திட்டித் தலையிலும் இடித்தார்.
பயணிகள் நெருக்கத்துக்கு மத்தியிலும் பேருந்துக்குள் இருந்து அவசரமாக இறங்கி ஆளை விட்டால் போதும், தப்பினேன் பிழைத்தேன் என்று நினைத்து ஓடினார் அந்த வயோதிபர். அவர் ஓடியதைப் பார்த்துப் பயணிகள் வாய்விட்டுச் சிரித்தனர்.