பிரித்தானியாவின் நீண்ட கால முடியாட்சியை நடத்தி வந்த மகா ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமாகியுள்ளார்.
இந்நிலையில், பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நாளை லண்டனுக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி அமைதியாக மறைந்துள்ளதுடன், அரசர் மற்றும் அவரது துணைவியான அரசி இன்று மாலை பால்மோரலில் தங்குவார்கள். நாளை அவர்கள் லண்டனுக்குத் திரும்புவார்கள்,” என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கு தொடர்பில் வெளியான தகவல்
இதேவேளை, ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டு 10 ஆவது நாள், அரசு முறைப்படி இறுதிச்சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் அரச குடும்பத்து ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் மூன்று நாட்கள் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்கொட்லாந்தில் இருந்து ரயில் மூலம் உடல் லண்டனுக்கு கொண்டுவரப்படவுள்ளதுட்ன, ஸ்கொட்லாந்தில் இருந்து ராணியாரின் உடல் லண்டனுக்கு கொண்டுவரும் நடவடிக்கைக்கு UNICORN என பெயரிட்டுள்ளனர்.
ரயில் சேவை பயன்பாட்டிற்கு இல்லை எனும் பட்சத்தில் விமான சேவையை பயன்படுத்த உள்ளதாகவும், ஐந்தாவது நாள் அவரது சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம்
அத்துடன் முன்னெடுக்கப்படும் இறுதி ஊர்வலமானது பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து தொடங்கி லண்டன் வழியாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கொண்டு செல்லப்படவுள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டருக்கு ராணியாரின் உடல் வந்தவுடன், வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் மத வழிபாட்டினையடுத்து வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இந்த மூன்று நாளும் மக்கள் 23 மணி நேரமும் அஞ்சலி செலுத்தலாம்.
ராணியாரின் உடல் நல்லடக்கம்
ராணியார் மறைந்ததன் 10வது நாள், அரசு முறைப்படி இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும். தொடர்ந்து, உத்தியோகபூர்வ சடங்குகளுக்குப் பிறகு, சவப்பெட்டி லண்டனில் இருந்து விண்ட்சர் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும், மேலும் இருபுறமும் ஊர்வலங்கள் நடைபெறும்.
விண்ட்சர் அரண்மனையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஆராதனைகளுக்கு பின்னர், அரச குடும்பத்து உறுப்பினர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள பிரத்தியேக கல்லறையில் ராணியாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.