எமது தவறுகளை தட்டிக் கேட்கும் உரிமை எமக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் உள்ளதே தவிர, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன் போன்றவர்களுக்கு எந்தவோர் அருகதையும் கிடையாதென முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தான் சபையில் இல்லாத நேரத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு பின்னரான செயற்பாடுகள்
மேலும் தெரிவிக்கையில், “2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது, கொழும்பு இரவு விடுதிகளில் சாணக்கியன் கும்மாளமடித்துக் கொண்டிருந்த காலங்களிலேயே நாங்கள் தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகளையும் தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றும் பணிகளையும் செய்யத் தொடங்கிவிட்டோம்.
அப்போதெல்லாம் இரவு விடுதிகளுக்குள் முடங்கி கிடந்த தம்பி சாணக்கியன், இப்போது தன் சுயநல அரசியலுக்காக எம்மை விசர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகள், வைத்தியசாலைகள், வீட்டுத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், விளையாட்டுக் களகங்கள் என பல உதவிகளை செய்திருக்கிறோம். இவற்றில் பலவற்றை அப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் நேரில் பார்த்தே இருக்கமாட்டார்.
அப்படிப்பட்ட சுயநல அரசியல்வாதிக்கு எம்மை போன்ற மக்கள் சேவகர்களை விமர்சிக்கும் எந்தவோர் அருகதையும் கிடையவே கிடையாது.
கொள்கையில் மாற்றமின்றி பயணிக்கும் பிள்ளையான்
பிள்ளையான் என்பவர் அன்று தொடக்கம் இன்று வரை தான் கொண்ட கொள்கையில் மாற்றமின்றி, கட்சித் தாவலின்றி எம்மோடு தொடர்ந்து பயணித்து வருகிறார்.
அவரது கட்சி நிகழ்வில் நாம் கலந்துகொள்வது தார்மீகக் கடமையும் கூட. நிலமை அப்படியிருக்கையில், அலரி மாளிகைக்கு அடிக்கடி வந்து எம்மோடு தேநீர் அருந்துவதும், நிலையான அரசியல் கொள்கையின்றி கட்சி தாவி சுயநலத்துக்காக தமிழ் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதையும் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.
நாங்கள் இப்பொழுதும் எமக்கு வாக்களித்த மக்களை பயமின்றி சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
ஆனால், புலம்பெயர் தமிழர்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டதையும், லண்டன் கூட்டத்தை இரத்து செய்யும் நிலையேற்பட்டதையும் சாணக்கியன் மறந்துவிடக் கூடாது”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.