எதிர்வரும் தேசியத் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம் கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்தக் கட்சிகளின் உள்ளக வட்டாரங்களை கோடிட்டு தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் குறிப்பிட்ட சில தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தாலும், அக்கட்சிகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள் ஜனாதிபதி மீது பலத்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதற்காக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தலைவர்கள் ஏற்கனவே அரசியல் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக மேற்படி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஈபிடிபி கட்சி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளதோடு, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க என வடக்கு, கிழக்கு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.