தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த 5 நாள் அதிகாரப்பூர்வ பயணம் தென்னிலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் இந்தப் பயணம் தொடர்பிலான பேச்சுகள் இன்னமும் குறையவில்லை.
அனுரகுமாரவின் இந்தப் பயணம் தேசிய மக்கள் சக்தி மீதான பல குற்றச்சாட்டுகளுக்கு விடை அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இராஜதந்திர உறவுகளை தேசிய மக்கள் சக்தியால் கட்டியெழுப்ப முடியாது மற்றும் சர்வதேச தொடர்ப்புகள் அற்றதொரு கட்சியாக இருப்பதாக தொடர்ச்சியான விமர்சனங்களை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தன.
பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய அனுர, கடந்த காலத்தில் இந்தியா தொடர்பில் கொண்டிருந்த தமது அரசியல் நிலைப்பாடுகளையும் மாற்றிக்கொண்டுள்ளார்.
கலந்துகொள்வதில் ஆட்சேபனைகள் ஏதும் உண்டா?
”இந்திய விஸ்தரிப்பு வாதத்தை இலங்கைத் தீவு முழுவதும் பரப்பியதில் ஜே.வி.பிக்கு பிரதான பங்குண்டு.
ஆனால், இந்தியாவின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது பிராந்தியத்தில் பதற்றத்துக்கு வழிவகுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முன்கெடுக்காது.” என அனுரகுமார கூறியுள்ளார்.
இந்த நிலையில், தமது புதுடில்லி பயணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பிய பிரதிநிதியுடன் அனுரகுமார ரகசிய சந்திப்பை நடத்தியதாக சில செய்திகள் பரப்பப்பட்டு வந்தன.
இதற்கு பதில் அளித்துள்ள அனுரகுமார, ”ரணில் அனுப்பிய எந்தவொரு ரகசிய பிரதிநிதியையும் நாங்கள் சந்திக்கவில்லை.
இராபோசன விருந்தொன்று எமக்கு வழங்கப்பட்டது. அந்த விருத்துக்கு புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர் கலந்துகொள்வதில் ஆட்சேபனைகள் ஏதும் உண்டா என இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கேட்டனர்.
எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென கூறினோம். அவர் இலங்கையின் பிரதிநிதியாகவே அங்கு உள்ளார். உள்நாட்டில் எமக்கு இருக்கின்ற கருத்து முரண்பாடுகளை அங்கு வெளிப்படுத்த முடியாது.” என்றார்.