பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அறிவித்த அமெரிக்கா

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் வெள்ளிக்கிழமை (01) ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரேனையும் காசா பகுதியையும் குழப்பியடித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பில், பைடன் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீனியர்களுக்கான மனிதாபிமான பொருட்களை காசாவிற்குள் வான்வழியாக அனுப்ப வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

எனினும் இதன்போது பைடன், “வரவிருக்கும் நாட்களில், நாங்கள் ஜோர்டான் மற்றும் பிற நட்பு நாடுகளுடன் இணைந்து உக்ரேனுக்கு வான் வழியாக உதவிகளை வழங்க உள்ளோம், மேலும் உக்ரேனுக்குள் அதிக அளவிலான மனிதாபிமான உதவிகளை வழங்கும் கடல் வழித்தடத்தின் சாத்தியம் உட்பட பிற வழிகளைத் திறக்க முயற்சிப்போம்” – என்றார்.

இது இரண்டாவது முறையாக மத்திய கிழக்கு பிரதேசத்தை கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரேனுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து பேசிய சந்தர்ப்பமாகும்.

ஜோ பைடன் கடுமையான மறுதேர்தல் போராட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில், 81 வயதான ஜனாதிபதியிடம் இருந்து தவறான அறிக்கைகள் மற்றும் மனரீதியான தவறான கருத்துக்கள் அடிக்கடி வெளி வந்த வண்ணம் உள்ளன.

அவர் கடந்த வாரம், யூலியாவுக்குப் பதிலாக அலெக்ஸி நவல்னியின் மனைவியை யோலண்டா என்று தவறாகக் குறிப்பிட்டார்.

வெளியுறவுக் கொள்கை பற்றி விவாதிக்கும் போது பைடன் குழப்பமடைவது இது முதல் முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், வியாழக்கிழமை (29) காசா பகுதியில் 100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பாலஸ்தீனத்துக்கான ஜோ பைடனின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

Recommended For You

About the Author: admin