2024 ஜனவரியில் சுற்றுலாத்துறையின் மூலமான இலங்கையின் வருமானம் 342 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் வெளித்துறை செயற்பாடுகள் பற்றிய சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
2020 ஜனவரி மாதத்துக்கு பின்னர் நாடு கண்ட அதிகபட்ச மாதாந்திர வருமானம் இதுவாகும்.
வியாழன் (29) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,
2023 டிசம்பரில் 269 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2023 ஜனவரியில் 154 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஜனவரியில் இலங்கையின் சுற்றுலா வருவாய் கணிசமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரியில் நாடு 208,253 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது, அதே 2023 ஜனவரி மாதத்தில் 102,545 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் பண அனுப்பல் அதிகரிப்பு
2024 ஜனவரியில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தைப் பொறுத்தமட்டில், முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இலங்கை முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
2023 ஜனவரியில் 437 மில்லியன் டொலர்கள் மற்றும் 2023 டிசம்பரில் 570 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஜனவரியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்கு 488 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் அதிகரித்து வரும் போக்கை தொடர்ந்து பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி
மத்திய வங்கியின் கூற்றுப்படி, பொருட்கள் ஏற்றுமதி மூலம் நாட்டின் வருமானம் 2023 ஜனவரியில் 978 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 2024 ஜனவரியில் 0.8% குறைந்து 971 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது.
எவ்வாறெனும் பொருட்கள் இறக்குமதிக்கான செலவு 2023 ஜனவரியில் 1,423 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 2024 ஜனவரியில் 6.2% அதிகரித்து 1,512 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம் நுகர்வோர் பொருட்கள் மற்றும் முதலீட்டு பொருட்கள் மீதான செலவின அதிகரிப்பு இந்த அதிகரிப்புக்கு பங்களித்துள்ளது.
மேம்பாட்டில் மொத்த கையிருப்பு
2024 ஜனவரி இறுதிக்குள் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு (GOR) 4.5 பில்லியன் அமெரிக்க டொலராக தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் அறிக்கை வெளிப்படுத்தியது.
இதில் சீனாவின் மக்கள் வங்கியின் (PBOC) இடமாற்று வசதியும் அடங்கும், இது சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும்.
இது பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்புக்கு, மத்திய வங்கியால் உள்நாட்டுச் சந்தையில் இருந்து அந்நியச் செலாவணியின் கணிசமான நிகர கொள்முதல் காரணமாகக் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, 2024 ஜனவரி மாதத்தில் மத்திய வங்கி 245 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிகர அடிப்படையில் வாங்கியதாகவும் இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.