தமிழ் மக்களின் நீடித்த அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் ஆதரவுகளும் குறைவடைந்து செல்வதாக மக்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.
தென்னிலங்கை ஆட்சியாளர்கள், ஒற்றை ஆட்சி அரசியலமைப்பினை தூக்கிப்பிடித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்ற போலியான விம்பத்தை காண்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த 40 வருடங்களாக தமிழ் மக்களின் போராட்டம் உக்கிரமடைவதற்கும் இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பே காரணமானது. இதனை சிங்கள புத்திஜீவிகள் பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஆனாலும் சிங்கள தலைவர்கள் தமது அரசியலை கொண்டு செல்வதற்கு இதனை ஒரு பிடிப்பாக கொண்டுள்ளார்கள் என்பதே கசப்பான உண்மை.
தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் தடுமாற்றம்
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என அரசியல் செய்பவர்களும் தீர்விற்கான பணிகளிலிருந்து விலகிச் செல்வதாகவும், கட்சி அரசியலில் தீவிரம் காண்பிப்பதாகவும் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் கவனத்தை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்ளும் அரசியல் இராஜதந்திர பணிகளை இவர்கள் ஆற்றாது தமக்குள் பதவிக்காக சண்டையிட்டுக் கொள்வதே சாபக்கேடானது.
வெறுமனே தமிழ் மக்கள், வாக்குவங்கிளாகவே பயன்படுத்தப்படும் துர்ப்பாக்கிய நிலைக்கு இன்று தமிழ் அரசியல் சென்றுவிட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அவலங்களும், வலிகளும் நிறைந்த தமிழர் தரப்பு அரசியலானது தடுமாறும் நிலைக்குச் சென்று கொண்டிருப்பதற்கு அவர்களுக்காக அரசியல் செய்பவர்கள் முழுப்பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவரை ஒருவர் கைகாட்டிவிட்டு இவர்கள் தப்பிக்க முடியாது. தமிழ் மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை இவர்கள் மறந்துவிட முடியாது.