பொதுக் கொள்வனவுகளில் ஊழல் புரிந்த ஒப்பந்தக்காரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில் தெற்காசிய நாடுகளில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக Verité Research நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொள்முதலின் போது ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான சரியான காரணத்தினை வெளிப்படுத்தாத நாடாக இலங்கை மாத்திரமே தெற்காசியா நாடுகளிடையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மருந்துக் கொள்வனவு உள்ளிட்ட சில விடயங்கள் தவிர இலங்கையில் அனைத்து பொதுக் கொள்வனவுகளையும் நிர்வகிக்கும், கொள்முதல் வழிகாட்டுதல்களில் (2006 ஆம் ஆண்டின்) உள்ள இடைவெளிகளே இதற்கான காரணமாக கூறப்படுகிறது.
அத்துடன் ஒப்பந்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிய ஒப்பந்தக்காரர்களை கறுப்பு பட்டியலில் சேர்க்காமை ஏற்கனவே உள்ள விதிமுறைகளுக்கு இணங்காததைக் காட்டுகிறது.
கடனை செலுத்த தவறிய ஒப்பந்தக்காரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது மட்டுமல்லாமல், அவர்களின் பெயர்களை பொது மற்றும் நிகழ்நிலை தரவுத்தளத்தில் வெளியிடவும் இலங்கையில் ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
எனினும் பொது நிதித் துறையால் நிர்வகிக்கப்படும் இந்த தரவுத்தளத்தில் கறுப்பு பட்டியல் குறித்த எவ்வித தரவுகளும் பதிவிடப்பட்டிருக்கவில்லையென ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டின் ஜூலை மாத நிலவரப்படி நேபாளத்தின் நிகழ்நிலை தரவுத்தளத்தில் 629 உள்ளீடுகளும், பங்களாதேஷில் 510 பதிவுகளும் காணப்பட்டன.
இந்நிலையில் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் சிறந்த நடைமுறைகளை பிரதிபலிக்கும் பொது கொள்முதல் சட்டத்தை இலங்கையில் இயற்ற வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாக காணப்படுகின்றது.
ஊழலை இல்லாதொழித்து நிதி நிர்வாகத்தை மீட்டெடுப்பதற்கு இந்த இடைவெளிகளை விரைவில் நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை அறிக்கை வலியுறுத்துகிறது.